மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
கருக்கொண்ட
மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே
அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத்
தட்டிப்பார்த்து,உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன், சிறுபறையும்,
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து, 5
துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்,
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும், 10
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் -
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே, 15
(கீழே கிடப்பதை)எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான (ஏறுதற்குக்)கடினமான சிறிய வழியை,
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
இடற்பாடு செய்யாமல், போவோர் வருவோரை (வழிகாட்டியும் உதவியும்)போகச்செய்யும்
பாறைக்குன்றின் உச்சியில், நடந்துபோகும் கடினத்தை(யும்) பெரிதாகக்கொள்ளாமல்,
உடைத்து அமைக்கப்பட்ட பாதையின் செங்குத்தான பகுதியில் (பழைய)வழித்தடத்தையே பார்த்து நடந்து - 20
(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
(பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு, 25